ரிஷாட் கைது: விசாரணையிலிருந்து கோத்தாகொட விலகல்

ரிஷாட் கைது: அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனைகளிலிருந்து நீதியரசர் யசந்த கோத்தாகொட விலகல் 

by Staff Writer 05-06-2021 | 12:35 AM
Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனைகளிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோத்தாகொட விலகியுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ்.துறைராஜா மற்றும் யசந்த கோத்தாகொட ஆகியோர் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று (04) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக மனு மீதான பரிசீலனையிலிருந்து விலகுவதாக நீதியரசர் யசந்த கோத்தாகொட அறிவித்துள்ளார். இதனால் இந்த மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், முதற்தடவையாக கடந்த மே மாதம் 28 ஆம் திகதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. விஜித் மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க, மற்றும் ஜனக் டீ சில்வா ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் அன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், தனிப்பட்ட காரணத்தினால் நீதியரசர் ஜனக் டீ சில்வா தாம் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி கைது செய்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என உத்தரவிடுமாறு இந்த மனுக்கள் மூலம் கோரப்பட்டுள்ளன.