தொடரும் மழையுடனான வானிலை; மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தொடரும் மழையுடனான வானிலை; மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

தொடரும் மழையுடனான வானிலை; மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2021 | 8:33 am

Colombo (News 1st) இன்று (05) காலை 5.30 மணியுடன் நிறைவடைந்த காலப் பகுதியில் அதிக மழை வீழ்ச்சி கம்பஹா மாவட்டத்தின் அல்கம பகுதியில் பதிவாகியுள்ளது.

அங்கு 184 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்றும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனிடையே, சீரற்ற வானிலையால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கிரியெல்ல பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, புத்தளம், நுவரெலியா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்,.

மழையுடனான வானிலையால் இருவர் காணாமற் போயுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மழையினால் பாதிக்கப்பட்ட 1,145 குடும்பங்களைச் சேர்ந்த 5,182 பேர் 233 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இதனடிப்படையில் பலத்த மழை காரணமாக 31990 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 478 வீடுகள் பகுதியளவிலும் 7 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான முன்னாயத்தங்களை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலையால் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் ரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, கலவான பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, ஹொரணை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி, நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களை தவிர்ந்த அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மண்சரிவு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர கேட்டுக் கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்