பலத்த மழையினால் 1,30,000 பேர் பாதிப்பு; மூவர் பலி

பலத்த மழையினால் 5 மாவட்டங்களை சேர்ந்த 1,30,000 பேர் பாதிப்பு; அனர்த்தங்களில் மூவர் பலி

by Staff Writer 04-06-2021 | 11:19 PM
Colombo (News 1st) கடும் மழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், இன்று இரவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்,சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  திணைக்களம் தெரிவித்துள்ளது. கடும் மழை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை, நுவரெலியா ஆகிய  மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கும் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கும்  இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட , கலவான, அயகம, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவிற்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் வானிலையை கருத்திற்கொண்டு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், கடும் மழையுடனான வானிலையினால் பல பகுதிகளில் அனர்த்தங்களும் பதிவாகியுள்ளன. இரத்தினபுரி, கிரியெல்ல தும்பர இஹல பொல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் மேடு சரித்து வீழ்ந்துள்ளது. அனர்த்தம் ஏற்பட்ட போது வீட்டில் தாயும் அவரது 16 வயதான மகளும் இருந்துள்ளனர். மண்சரிவின் பின்னர் தாயின் உயிரைக் காப்பாற்ற முடிந்த போதிலும், 16 வயதான சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. வீட்டின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்த போது அருகில் உள்ள வீதியில் பயணித்த ஒருவரும் அனர்த்தத்தில் சிக்கியுள்ளார். அவரைத் மீட்கும் முயற்சியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, மாரவில - வில்பார பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 14 வயதான சிறுவனைத் தேடும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மாதம்பை - முஹூனுவடவன பிரதேசத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வௌ்ள நீர்ப்பிரவாகத்தை நண்பர்களுடன் பார்க்கச் சென்ற போதே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். நாரம்மல - படுவஸ்நுவர உடுகம்பல பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளது. அங்கு நண்பர்களுடன் வௌ்ளப் பெருக்கை பார்க்கச் சென்ற 20 வயதான இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். கெடஹெத்த - பொலஅத்தேகடை பிரதேசத்தின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதுடன், எஹலியகொட - கிரியெல்ல பிரதான வீதியிலும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுவலை - பேரகஸ்முல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஐந்து வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடுவலை - கொரதொட பிரதேசத்திலுள்ள வீடொன்றும் தாழிறங்கியுள்ளது. கொழும்பில்  கடும் மழை காரணமாக கடுவலை, களனி உள்ளிட்ட சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கொட்டிகாவத்தை பிரதேசத்தில் சுமார் 400 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. களனி கங்கை பெருக்கெடுத்தமையினால், களனிமுல்ல, நாகஹவெல, தஹம்வெல உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்னனர். மேலும், பாலத்தோட்டையில் சுமார் 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வெல்லம்பிட்டியிலும் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஹங்வல்லை சீவலிவத்த பிரதேசத்தில் சுமார் 60 வீடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர்பெயர்ந்தவர்கள் ஹங்வல்லை -  மாயாதுன்ன வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தியவன்னா ஓயா பெருக்கெடுத்தமையினால், பாலமுல்ல, கமகேவத்த பகுதியில் 130 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.   கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. காலியில் இன்று கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. இதனால் பல பகுதிகளில் மீனவர்கள் இன்று கடற்றொழிலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக அளுத்வல, கோனாபீனுவல ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கின. கிங் கங்கை பெருக்கெடுத்தமையினால், உடுகம - ஹினிதும பிரதான வீதி நீரில் மூழ்கியது. காலி - நெலுவ வீதியும் நீரில் மூழ்கியதுடன், இதனால் இந்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. மாத்தறையில் கடும் மழையினால் அக்குரஸ்ஸ - பானதுகம பிரதேசமும் சில தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. பதுளையில் ஹால்ஓயா பெருக்கெடுத்தமையினால் சில பகுதிகளில் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வத்தளை - எந்தாரமுல்ல, வெலிக்கடமுல்ல பகுதியில் நேற்று பெய்த கன மழையால் அருகில் உள்ள வடிகாண்கள் நிரம்பியதால் வௌ்ளம் குடியிருப்புகளுக்குள் நிறைந்துள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீதிகளிலும் இரண்டு அடிக்கு மேல் வௌ்ளம் தேங்கியுள்ளது. மாளிகாவத்தையிலும் வீடுகளுக்குள் வௌ்ளம் நிறைந்துள்ளதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழையுடன் கூடிய வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளத்தினால் நீர்கொழும்பு - பெரியமுல்லை பகுதியிலுள்ள பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. வௌ்ளத்தினால் குறித்த பகுதியில் வசிக்கும் சுமார் 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகநியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டம் டயகம பகுதியில் நேற்றிரவு பெருக்கெடுத்த வெள்ளம் தற்போது வடிந்தோடி வருகிறது. வௌ்ளப் பெருக்கினால் டயகம ஈஸ்ட் தோட்டத்தில் 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   பலாங்கொடை - இம்புல்பே பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மாரதென்ன இரண்டாம் பிரிவு தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், குறித்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். குறித்த பகுதியில் 2014 ஆம் ஆண்டு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து புதிய வீடுகளை கட்டுகின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு பின்னர் இடைநடுவில் கைவிடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லெவன்த் தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் நேற்று மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதுடன் நிலத்திலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 25 குடும்பங்களைச் சேர்ந்த 149 பேர் வாழ்கின்ற இந்த தொழிலாளர்கள் குடியிருப்பிலுள்ளவர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த குடியிருப்பை அண்மித்த பகுதியில் 2016 ஆம் ஆண்டு முதல் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கேகாலை - ருவான்வெல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ​பஹீட்ட ஹில் கம கிராமத்தில் இன்று அதிகாலை பாரிய கற்பாறையொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் அருகிலுள்ள சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி குறித்த குடியிருப்பினை அண்மித்த பகுதியில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. கன மழை காரணமாக புத்தளம் - தில்லையடி, ரத்மல்யாய, கடையாக்குளம், முள்ளிபுரம் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. புத்தளம் - முந்தல் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கீரியங்கள்ளி பகுதியிலுள்ள தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 9 பேரை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை மீட்டுள்ளனர். அத்துடன், கீரியங்கள்ளி - ஆண்டிகம பிரதான வீதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதியூடனான போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டிருந்தது.