புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை

அவுஸ்திரேலியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை நியூஸிலாந்தில் குடியேற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை 

by Bella Dalima 04-06-2021 | 11:34 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலிய கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்களை நியூஸிலாந்தில் குடியேற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாவுறு மற்றும் பப்புவா நியூகினியாவிலுள்ளவர்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது உள்ளனர். அவுஸ்திரேலியாவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை நியூஸிலாந்தில் குடியேற்றுவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை இரு நாட்டு அரசாங்கங்களும் முன்னெடுத்து வருவதாக The Guardian செய்தி வௌியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய கரையோரப் பகுதிகளிலுள்ள 150 புகலிடக் கோரிக்கையாளர்களை நியூஸிலாந்தில் குடியேற்றுவதற்கு தமது நாடு தயார் என நியூஸிலாந்தின் குடிவரவு அமைச்சர் Kris Faafoi உறுதிப்படுத்தியுள்ளார். இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாவுறு தீவில் 105 புகலிடக் கோரிக்கையாளர்களும் பப்புவா நியூகினியாவில் 130 புகலிடக் கோரிக்கையாளர்களும் தற்போது உள்ளனர். இவர்கள் தடுப்பு முகாம்களில்  தடுத்து வைக்கப்படாத போதிலும், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.