வைத்தியர்கள் என கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

வைத்தியர்களாக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

by Staff Writer 03-06-2021 | 1:45 PM
Colombo (News 1st) கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறி கெஸ்பேவ பகுதியில் வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியர்களாக தம்மை அடையாளப்படுத்திய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். முகப்புத்தக பக்கமொன்றினூடாக தங்களின் சேவை குறித்து பதிவுகளை இட்டு இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கெஸ்பேவ சுகாதார சேவைகள் பணிமனையூடாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ள கெஸ்பேவ - கஹபொல பகுதியில் உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க வேன் ஒன்றில் சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்குவதற்காக 12,500 ரூபா கட்டணத்தையும் சந்தேகநபர்கள் அறவிட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள வீடுகளுக்கும் சந்தேகநபர்கள் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரும் வைத்தியர்கள் அல்லவெனவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சந்தேகநபர்களை கெஸ்பேவ வைத்தியசாலையில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.