மூழ்கிய கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம்

மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் 

by Staff Writer 03-06-2021 | 11:38 PM
Colombo (News 1st) தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலின் எஞ்சிய பகுதிகளும் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. கப்பலில் இருந்த பொருட்கள் பெருமளவில் தீயினால் அழிந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூழ்கி வரும் கப்பலின் சிதைவுகளை கடற்படையின் சுழியோடிகள் இன்று ஆய்வு செய்தனர். கப்பலின் எண்ணெய் கடலில் கலப்பது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும். சுமார் 300 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலில் இருந்துள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.   தற்போது கப்பல் உள்ள நிலையில், அங்கு சென்று தாங்கியில் எண்ணெய் உள்ளதா என ஆராயும் நிலைமை இல்லை என துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   எண்ணெய் பரவ ஆரம்பித்தால், இரசாயனம் மூலம் அதனை கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் காலநிலை காரணமாக அதனை செய்ய முடியாமற்போனால், கடற்கரையை சுத்தம் செய்ய நேரிடும் எனவும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர குறிப்பிட்டார். கப்பல் மூழ்கியுள்ள பகுதி துறைமுகத்திற்கு உட்பட்டது என்பதால், அதனை அகற்ற வேண்டிய தேவை உள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி பேராசிரியர் டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார். இந்நிலையில், இன்று கடற்கரையின் சில பகுதிகளில் கப்பலின் கழிவுப் பொருட்கள் தேங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். கல்கிசை , மாத்தறை - பொல்கேன உள்ளிட்ட பகுதிகளில் கழிவுகள் தேங்கியுள்ளன. இதேவேளை, பல நாட்களாக கடலுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட திக்ஓவிட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கு சென்ற போதிலும் மீன்கள் பிடிபடவில்லையென தெரிவித்தனர். இதேவேளை உனவட்டுன கடற்கரையில் கரையொதுங்கிய கடல் ஆமையின் உடலை அத்திட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு காலி மேலதிக நீதவான் பவித்திரா சஞ்சீவினி பத்திரண ஹிக்கடுவை வனஜீவராசிகள் பிரிவிற்கு உத்தரவிட்டார். இந்த ஆமையின் உயிரிழப்பிற்கு தீப்பற்றிய கப்பலில் இருந்த இரசாயனம் காரணமா என ஆராயுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்பிற்கான நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ளும் நிலைப்பாடு உள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் அதற்கான செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க குறிப்பிட்டார்.