புதிய சுகாதார சட்டமொன்றை நிறைவேற்றுக: சஜித் யோசனை

நிலையான புதிய சுகாதார சட்டமொன்றை நிறைவேற்றுமாறு  சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு யோசனை 

by Staff Writer 03-06-2021 | 10:44 PM
Colombo (News 1st) வலுவான சுகாதார சேவையை உறுதிப்படுத்துவதற்காக நிலையான புதிய சுகாதார சட்டமொன்றை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். இந்த யோசனையை பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைத்தாலும் அரசாங்கம் இன்னமும் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற சுகாதார ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை, தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் காணப்படுகின்ற முறைகேடுகள், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அரசியல்மயமாக்கப்பட்டமை, புற்றுநோய், நீரிழிவு நோய், இருதய நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடு போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். லீசிங் மற்றும் ஃபினான்ஸ் நிறுவனங்கள் கடன் சலுகை திட்டத்தை கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.