சேதனப் பசளை உற்பத்தியை துரிதப்படுத்த திட்டம்

உள்நாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 03-06-2021 | 9:52 PM
 Colombo (News 1st)  பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சேதனப் பசளையை தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை இறக்குமதி செய்யுமாறும் இலங்கையில் தயாரிக்கக் கூடியவற்றுக்கு நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ பொறியியல் படையணியின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அலோசனை வழங்கியுள்ளார். சேதனப் பசளை தயாரிக்கும் பணிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன்,  அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். சேதனப் பசளையை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை கிராமங்களிலேயே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதன் மூலம் கிராமங்களின் தூய்மையையும் அழகையும் பேண முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சமுர்த்தி பயனாளிகளின் பங்களிப்பை பெறுவதன் மூலம் புதிய கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.   சேதனப் பசளையை பயன்படுத்தும் முறைமை குறித்து விளக்கமளிக்கும் ஆலோசனைகளை அச்சிட்டு விவசாயிகளுக்கு வழங்கவும்  தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.