இஸ்ரேலின் புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக் தெரிவு

இஸ்ரேலின் புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக் தெரிவு

by Bella Dalima 03-06-2021 | 4:17 PM
Colombo (News 1st) இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அங்கு திடீர் திருப்பமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை நிறுவ முடிவு செய்துள்ளன. இதனால் இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்து வரும் இந்த  சூழலில் அந்நாட்டின் அதிபர் ரூவன் ரிவ்லினின் பதவிக் காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதனால் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இஸ்ரேல் பாராளுமன்றம் நேற்று கூடியது. இதில் மூத்த அரசியல்வாதியும், ஒரு முக்கிய இஸ்ரேலிய குடும்பத்தின் வாரிசுமான ஐசக் ஹெர்சாக் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டார். 60 வயதான ஐசக் ஹெர்சாக் இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை சைம் ஹெர்சாக் இஸ்ரேலின் முன்னாள் அதிபர் ஆவார். அதிபராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு சைம் ஹெர்சாக் அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதராக இருந்தார்.