அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

by Staff Writer 03-06-2021 | 8:28 AM
Colombo (News 1st) லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், மாகாணசபைக்கு உட்பட்ட மற்றும் சுகாதார துறைக்குட்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் வரையறுக்கப்பட்ட இலங்கை ​கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சகல உணவு குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான ஏனைய சகல நுகர்வுப் பொருட்களை வழங்குதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாகாண சபைகளின் கீழுள்ள சகல அரச அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளும் அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சுகாதார சேவைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.