by Staff Writer 02-06-2021 | 9:57 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது.
கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கப்பலின் பிற்பகுதி தரை தட்டியமையினால் ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கப்பலின் பின்பகுதி இன்று மாலை 3 மணியளவில் தரை தட்டியதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்காக முன்நிற்கும் MTI Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வலயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் அன்ரு லிஹீ தெரிவித்தார்.
எனினும், கப்பலின் முன்பகுதி தொடர்ந்தும் மிதந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
கப்பலின் கொள்கலன்களை ஏற்றிய பகுதியில் தொடர்ந்தும் புகை வௌியேறுவதாகவும் அன்ரு லிஹீ கூறினார்.
இலங்கை கடற்படை அணியொன்று இன்று முற்பகல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முயற்சித்த போதிலும் பின்னர் அதனை கைவிட வேண்டி ஏற்பட்டது.
கப்பலின் ஒரு பகுதி மூழ்கியுள்ளமையினால் எண்ணெய்க் கசிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.
தீப்பற்றிய கப்பலில் 278 மெட்ரிக் தொன் எரிபொருள் காணப்படுவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.
சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான சமாரக்ஷா கப்பல், தீப்பற்றும் கப்பலுக்கு அருகில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால், அதனை முகாமைத்துவம் செய்யும் இயலுமை இந்தக் கப்பலில் காணப்படுகின்றது.
இதனிடையே, கப்பலினால் கடலில் கலந்துள்ள இரசாயனப் பொருட்கள் காரணமாக கடல் நீரி PH அளவில் மாற்றம் ஏற்படவில்லையென நாரா நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சமுத்திரிக்கா கப்பல் மூலம் MV X-Press Pear கப்பல் தீப்பற்றிய இடத்திற்கு சென்று மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித்த கித்சிறி கூறிளனார்.