சீனாவில் பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிப்பு

சீனாவில் உருமாறிய பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிப்பு

by Bella Dalima 02-06-2021 | 4:05 PM
Colombo (News 1st) சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயதான நபர் முதன்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.   அவர் ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பறவைக்காய்ச்சல், கோழிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது எனவும் இது தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நபர்  H10N3  ஏவியன் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 28 ஆம்  திகதி ஆளானதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அவருக்கு எவ்வாறு அந்த வைரஸ் தாக்கியது என்பது குறித்து கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இதுவரை உலகில் வேறு யாரும் இந்த வகை பறவைக்காய்ச்சலுக்கு ஆளானது இல்லை என்று சீன தேசிய சுகாதார ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது கோழிப்பண்ணையில் இருந்து உருவாகக்கூடிய வைரஸ் என்றும், ஒப்பீட்டளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாத வகை என்றும், பெரிய அளவில் பரவுவதற்கான ஆபத்து குறைவு என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்கள் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.