அமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்துள்ளது

சீனாவின் நண்பன் என்ற கோணத்திலேயே இலங்கையை கருத வேண்டும்: ராமதாஸ் 

by Staff Writer 02-06-2021 | 10:14 PM
Colombo (News 1st) இலங்கையிலிருந்து சீனா மூலமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசின் தவறான இலங்கை வெளியுறவுக் கொள்கையே காரணம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டொக்டர் எஸ். ராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் அமெரிக்காவால் செய்ய முடியாமற்போனதை சீனா சாதித்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டு, இந்தியத் தமிழர்களை உதாசீனப்படுத்தி விட்டு, இலங்கைக்கு இந்தியா எவ்வளவு உதவிகளைச் செய்தாலும் அவற்றையெல்லாம் இலங்கையின் ஆட்சியாளர்கள் மறந்துவிட்டதாக எஸ். ராமதாஸ்  தெரிவித்துள்ளார். மாறாக சீனாவிற்கு ஆதரவாக இந்தியாவிடமிருந்து வெகுதொலைவிற்கு இலங்கை விலகிப்போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்னமும் இலங்கையை பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை இந்தியா தொடரக்கூடாது எனவும் சீனாவின் நண்பன் என்ற கோணத்திலேயே இலங்கையை கருத வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதற்கமைவாக இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு குறித்த  நிலைப்பாட்டையும் இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.