கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை - நாரா

கடல் நீரின் pH அளவில் மாற்றம் இல்லை - நாரா நிறுவனம்

by Staff Writer 02-06-2021 | 9:29 AM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலின் இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ள போதிலும், நீரின் pH அளவில் மாற்றமேதும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் ஆரம்பகட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாரா நிறுவனத்திற்கு உரித்தான சமுத்ரிகா கப்பல், நேற்று X-Press Pearl கப்பலுக்கு அருகில் பயணித்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாலித்த கித்சிறி குறிப்பிட்டுள்ளார். கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள பகுதியின் அடியிலுள்ள மணல், நீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார். இரண்டு குழுக்கள் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. கப்பலில் காணப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனப் பதார்த்தங்கள், உரம் போன்றவற்றால் கடல் நீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள இடத்திலுள்ள நீரின் pH அளவில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை என நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் நேற்று எடுக்கப்பட்ட மாதிரிகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாலித்த கித்சிறி குறிப்பிட்டுள்ளார்.