Colombo (News 1st) Sputnik V முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவிப்பதாக மக்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு நேற்றும் இன்றும் கண்டியில் இடம்பெற்றது.
எனினும், சிலர் அதனை நிராகரித்ததுடன் இரண்டாம் தடுப்பூசி அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
கண்டி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் சேனக தலகல இது தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதை நிராகரித்தார்.
தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் இது தொடர்பில் வினவப்பட்டது.
நிபுணத்துவ வைத்திய ஆலோசனைக்கு அமையவே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையை அவதானித்தே ஒரு தடுப்பூசியேனும் போதுமானது என தீர்மானிக்கப்படுகிறது. நோய் பரவலைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சத்திரசிகிச்சையொன்றுக்கு சென்றாலும் கையொப்பமிட வேண்டும். அவ்வாறே தகவல்கள் அடங்கிய ஆவணத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. அதனை பலவந்தமாக கையொப்பம் பெறுவதாக அர்த்தப்படுத்த முயல்கின்றனர். கண்டியியிலும் விசேட வைத்திய நிபுணர்களே இதனை செய்தனர். அவர்களுக்கு அது தொடர்பில் ஆலோசனை கிடைத்திருந்தது
என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பதிலளித்தார்.
Sputnik V தடுப்பூசியின் இரண்டு டோஸ்களில் முதலாவது டோஸில் மாத்திரம், திருப்தியடைய முடியும் என ரஷ்யாவின் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆய்வு நிறுவனம் என்பன எமக்கு அறிவித்ததால், ஒரு டோஸில் மாத்திரம் திருப்தியடைய நாம் தீர்மானித்தோம். தற்போதைக்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவர்களின் சிபாரிசின் படியே அது இடம்பெறும்.
என பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளைக் கொண்ட Sputnik V தடுப்பூசிக்கே அனுமதி வழங்கியுள்ளதாக தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்தது.
Sputnik V முதலாம் தடுப்பூசிக்கு 6.5 மில்லியனும் இரண்டாம் தடுப்பூசிக்கு 6.5 மில்லியனும் செலுத்தி அதனைக் கோரியுள்ளதாக அதிகார சபை கூறியது.
வேறு தடுப்பூசிகளைப் போன்றல்லாமல் அதன் இரண்டு தடுப்பூசிகளும் வித்தியாசமானவை என அதிகார சபை தெரிவித்தது.