தீப்பற்றிய கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு

தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு

by Staff Writer 01-06-2021 | 9:12 PM
Colombo (News 1st) தீப்பற்றிய MV X-Press Pearl கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படையின் 9 சுழியோடிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கப்பலில் பரவிய தீ முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று (31) நள்ளிரவு முதல் கடற்படையினர் கப்பலை கண்காணித்ததுடன், கப்பலின் பின்பகுதி அதிகமாக நீரில் மூழ்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எஞ்சின் அறை உள்ளிட்ட பகுதிகளில் நீர் உட்புகுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். மீட்பு நிறுவனம், வர்த்தகக் கப்பல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் 9 சுழியோடிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். இந்நிலையில், குறித்த  கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் மேலதிக பொறியியலாளர் ஆகியோர் நாட்டில் இருந்து வௌியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார். கப்பலில் தீ பரவியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை அறிக்கையை முன்வைத்து விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனிடையே, அரச இரசாயன பகுப்பாய்வாளருடன் கப்பலை சோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்