by Staff Writer 01-06-2021 | 9:51 PM
Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிக் கடிதங்களை தவறான முறையில் பயன்படுத்துவோர் தொடர்பில் இன்று பொலிஸார் ஆராய்ந்தனர்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மஹர பகுதியில் வீதித் தடை அமைத்து இன்றும் பொலிஸர் சோதனை மேற்கொண்டனர்.
சில வாகனங்களை பொலிஸார் திரும்பி அனுப்பியதுடன், மேலும் சில வாகனங்கள் மற்றும் சாரதிகளின் நிழற்படங்களை பொலிஸார் பதிவு செய்து கொண்டனர்.
பேலியகொடை, ஒருகொடவத்தை, மாளிகாவத்தை பகுதிகளிலும் சோதனை இடம்பெற்றது.
அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் இதன்போது திருப்பி அனுப்பப்பட்டனர்.
வெலிக்கடை பொலிஸார் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை இராஜகிரியவில் இன்றும் சோதனைக்கு உட்படுத்தினர்.
சுங்கத்திற்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றும் கல்கிசை பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தற்போதைய சட்டத்திற்கு அமைய ஏற்றிச்செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பஸ்ஸில் ஏற்றப்பட்டிருந்தமை இதன்போது தெரியவந்தது.
பின்னர் பஸ்ஸில் இருந்த சிலரை இறக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
கிருலப்பனையிலும் இன்று பொலிஸார் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தினர்.
களுத்துறை, பாணந்துறை பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனிடையே, இராணுவ மோட்டார் சைக்கிள் குழுவினர் மற்றும் காலாற்படையினர் கண்டியின் சில பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.