இஸ்ரேலில் முடிவிற்கு வருகிறதா நெதன்யாகுவின் ஆட்சி?

இஸ்ரேலில் முடிவிற்கு வருகிறதா நெதன்யாகுவின் ஆட்சி?

by Bella Dalima 01-06-2021 | 4:43 PM
Colombo (News 1st) இஸ்ரேலில் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தால் அது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக அமையும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். நெதன்யாகுவுக்கு எதிரான மையவாதக் கட்சியுடன் அதிகாரப்பகிர்வு செய்துகொள்ளப் போவதாக அதிதீவிர தேசியவாதத் தலைவர் நெப்தலி பென்னட் அறிவித்திருக்கிறார். ஆனால், அப்படியொரு உடன்பாட்டை ஆதரிக்க வேண்டாம் என வலதுசாரித் தலைவர்களை பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். பென்னெட்டின் திட்டம் வெற்றி பெற்றால், நீண்டகாலமாக பிரதமராக இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நெதன்யாகுவின் அணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த இரு ஆண்டுகளில் உறுதியான முடிவு கிடைக்காத நான்காவது தேர்தலாக இது அமைந்துவிட்டது. நெதன்யாகுவால் ஆட்சியமைக்கும் அளவிற்கு கூட்டணி ஆதரவையும் திரட்டமுடியவில்லை. இதனிடையே, "இடதுசாரி ஆட்சியை அமைக்காதீர்கள். அது இஸ்ரேலின் பாதுகாப்பிற்ம் எதிர்காலத்திற்கும் ஆபத்தாக அமைந்துவிடும்." என்று நெதன்யாகு எச்சரித்துள்ளார். 71-வயதான நெதன்யாகு 12 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார். நீண்ட காலமாக இஸ்ரேலிய அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கிறார். அவர் மீது மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. மக்களைத் தவறாக வழிநடத்துவதாக பென்னட் மீது குற்றம் சாட்டியிருக்கும் நெதன்யாகு, அவர் "நூற்றாண்டின் மோசடியை" செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார். 49 வயதான பென்னட் இஸ்ரேலில் ஆட்சியமைக்கும் பேச்சுகளில் பங்கேற்கப் போவதாக தொலைக்காட்சி உரை மூலமாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். வலதுசாரி அரசு ஒன்றை அமைப்பதற்கு நெதன்யாகு இனியும் முயற்சி செய்ய மாட்டார். ஏனெனில் அப்படியொன்று இல்லையென்பது அவருக்குத் தெரியும். தன்னுடைய நிலைப்பாட்டை நோக்கி ஒட்டுமொத்த நாட்டையும் அழைத்துச் செல்ல அவர் விரும்புகிறார் " என பென்னட் குற்றம் சாட்டியுள்ளார். தனது நண்பர் லேபிட்டுடன் சேர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு அரசை அமைப்பதற்கு ஆவன அனைத்தையும் செய்யப் போவதாகவும் பென்னட் குறிப்பிட்டுள்ளார். தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டணியில் இஸ்ரேலிய அரசியலின் வலது, இடது, மையவாதக் கட்சிகளின் பிரிவுகள் இடம்பெறுகின்றன. அரசியல் ரீதியாக இவர்களுக்கு பொதுவான கொள்கை ஏதுமில்லை. ஆனால் நெதன்யாகுவின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நெதன்யாகுவால் ஆட்சியமைக்க முடியாமல் போனதால், லேபிட் ஆட்சியமைப்பதற்கு வரும் ஜூன் 2-ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு அடுத்தபடியாக லேபிட்டின் யேஷ் ஆடிட் கட்சி அதிக இடங்களில் வென்றிருக்கிறது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பென்னட்டின் கட்சிக்கு ஆறே இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. ஆயினும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு இது அவசியமாகியிருக்கிறது.      

Source: BBC