கொழும்பிற்குள் பிரவேசிப்போரை கட்டுப்படுத்த பொலிஸ் சோதனைகள் அதிகரிப்பு

கொழும்பிற்குள் பிரவேசிப்போரை கட்டுப்படுத்த பொலிஸ் சோதனைகள் அதிகரிப்பு

கொழும்பிற்குள் பிரவேசிப்போரை கட்டுப்படுத்த பொலிஸ் சோதனைகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2021 | 10:54 pm

Colombo (News 1st) பயணத்தடை கடுமையாக்கப்பட்டதை அடுத்து பொலிஸாரின் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு உள்ளிட்ட அநேகமான நகரங்களில் இன்று முற்பகல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொழும்பு மாநகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து இடங்களிலும் இன்று அதிகாலை முதல் பொலிஸார் வீதித்தடையமைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

மொறட்டுவை நகரிலும் கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மஹரகம, நாவின்ன, ஹைலெவெல் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையிலும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

இப்பன்வல சந்தியில் வீதித்தடை அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன்போது, அனைத்து வாகனங்களும் எவ்வித பாகுபாடுமின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அனுமதி வழங்கப்படாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

 

இராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகிலும் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வெலிக்கடை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இதன்போது தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

பேலியகொடையில் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

கடவத்தை – மஹர பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அதிகளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இன்று முற்பகல் பேலியகொடை பாலத்திற்கு அருகே போக்குவரத்து நெரிசல் நிலவியது.

களுத்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் சில இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

மட்டக்களப்பிலும் இன்று பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

 

கண்டி – தென்னெகும்புற, மஹியாவ, கல்கடுவ சந்தி, கண்டி நகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கென்கல்ல மகா வித்தியாலய COVID தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையத்தில் இருந்து பயணத் தடையை மீறுவோரை கண்டுபிடிப்பதற்காக ட்ரோன் கெமராக்கள் அனுப்பி வைக்கப்பட்டன

வவுனியாவில் கடந்த சில தினங்களை விட இன்று மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பயணத் தடையை மீறுவோரை கண்டுபிடிப்பதற்காக ட்ரோன் கெமராக்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பல பகுதிகளிலும் ட்ரோன் கெமராக்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டது.

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றும் இராணுவ மோட்டார் சைக்கிள் அணிகள் தேடுதலை மேற்கொண்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்