MV X-Press Pearl கப்பலில் நச்சுப் பொருட்கள் இருந்தனவா?
by Staff Writer 30-05-2021 | 10:44 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் கெப்டனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சிலர் இன்று பிற்பகல் சென்றிருந்தனர்.
கெப்டன் உட்பட கப்பலின் பணியாளர்கள் சிலர் வெள்ளவத்தையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று பிற்பகல் 3.45 அளவில் சென்றிருந்தனர்.
எனினும், கப்பல் சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் கெப்டனிடம் இருக்காததால் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நச்சுப்பொருட்கள் அடங்கிய இரண்டு கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் இருந்தமை தொடர்பாக சர்வதேச பொலிஸார் அறிந்திருந்ததாக ரியாத்தின் பிரின்சஸ் நவுரா பல்கலைக்கழக ஆய்வுத் திணைக்களத்தின் பேராசிரியர் சந்திமா விஜேகுணவர்தன தெரிவித்தார்.
இது குறித்து வினவுவதற்காக வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் நாயகமான அஜித் செனவிரத்னவுடன் தொடர்பினை ஏற்படுத்த பல தடவைகள் முயற்சித்த போதிலும் அவை பலனளிக்கவில்லை.
குறித்த கப்பல் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூரின் MTI Networks நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பில் தயாரித்துள்ள தகவல் மையத்தின் இணையத்தளத்திற்கு அமைய கப்பலில் 1,486 கொள்கலன்கள் இருந்துள்ளன.
நைட்ரிக் அமிலம் 25 தொன், மேலும் 81 கொள்கலன்களில் அபாயகர பொருட்கள் இருந்துள்ளன.
இது தொடர்பாக பொறுப்புவாய்ந்த தரப்பினர் இன்று வரை எவ்வித தகவலையும் வௌியிடவில்லை.
எவ்வாறாயினும், கதிரியக்க பொருட்கள் இந்த கப்பலில் இருந்தனவா என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித்திடம் வினவிய போது, அத்தகைய பொருட்கள் இருக்கவில்லை என துறைமுகங்கள் அதிகார சபை தமக்கு அறிவித்ததாக பதிலளித்தார்.