இன்று 8 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

by Staff Writer 30-05-2021 | 9:44 PM
Colombo (News 1st) இன்றும் 08 மாவட்டங்களில் தடுப்பூசியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். Sputnik V கொரோனா தடுப்பூசியேற்றும் செயற்பாடுகள் இன்று கண்டியில் ஆரம்பிக்கப்பட்டன கண்டி - குண்டசாலை பண்டாரநாயக்க தேசிய பாடசாலை மற்றும் மெனிக்ஹின்ன பிலவல மகா வித்தியாலயங்களில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - வௌ்ளவத்தை ரொக்சி கார்டனில் இன்று Sinopharm தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. மாளிகாவத்தை பி.டி சிறிசேன விளையாட்டு மைதானம் மற்றும் கெத்தாராம விகாரையில்  தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் ஹிரியால, மாவத்தகமை, குருநாகல் போன்ற பகுதிகளில் சுகாதார நடைமுறைகளுக்கமைய இன்று தடுப்பூசியேற்றப்பட்டது. மாத்தறை - வெஹெரசேன பூர்வாராம விகாரையில் இன்றும் தடுப்பூசி ஏற்றப்பட்டது. அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு, காலி அக்மீமன சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது. நாராஹேன்பிட்டி - அபயாராமவில் இன்று AstraZeneca இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டது. நேற்று இந்த விகாரையில் வழங்கப்பட்ட பெயர் பட்டியலுக்கமைய இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதேவேளை, யாழ். மாவட்ட மக்களுக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்திற்குரிய முதற்கட்ட கொரோனா தடுப்பூசிகள் கையளிக்கும் நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று காலை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா , வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். யாழ். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அரியாலை - புங்கங்குளம் பகுதி மக்களுக்கும் இன்று  தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதேவேளை, யாழ். தென்மராட்சி - கைதடி தெற்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பார்வையிட்டார். கோப்பாய், கல்வியங்காடு (J/259) கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது. யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது வட்டுக்கோட்டை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சுமார் 1008 பேருக்கு Sinopharm தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் COVID தடுப்பூசி ஏற்றப்பட்டன.