இலங்கை எதிர்கொண்டுள்ள சுற்றாடல் பேரழிவு

இலங்கை எதிர்கொண்டுள்ள சுற்றாடல் பேரழிவு

by Bella Dalima 29-05-2021 | 10:14 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் கடலில் பல பொருட்கள் கலந்தமை சுற்றாடல் பேரழிவு என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடல்சார் நிபுணரான சரித்த பட்டியாரச்சி தெரிவித்தார். கப்பலில் 7 .8 மில்லியன் அளவு பிளாஸ்டிக் துணிக்கைகள் இருந்துள்ளன. சிலவற்றை அப்புறப்படுத்த முடியும். எனினும், அவை நீண்டகாலம் நீடித்திருக்கக்கூடியவை. இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேஷியா மற்றும் சோமாலியா போன்ற நாடுகளுக்கும் இவை மிதந்து செல்லலாம். அதேபோன்று,  நாட்டின் தெற்கு கடல் பரப்பில் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என சரித்த பட்டியாரச்சி குறிப்பிட்டார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான சுற்றாடல் அழிவு இதுவாகும். இந்தக் கப்பலில் 300 மெட்ரிக் தொன் எண்ணெய் உள்ளது. ஆகவே, கப்பல் மூழ்குவதனை தவிர்க்க வேண்டும்
என அவர் வலியுறுத்தினார். TV 1 தொலைக்காட்சியில் நேற்றைய நியூஸ்லைன் தொகுப்பில் கலந்துகொண்ட அங்கீகாரமளிக்கப்பட்ட விநியோக மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் உபதலைவர் ரோஹன அபேவிக்ரம இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்ததாவது
இங்கு இதுபோன்ற நிலைமையை நிர்வகிப்பதற்கு தேவையான விசேட அறிவு போதாது என்பது தெளிவானது. முதலாவதாக கப்பலின் தீயை கட்டுப்படுத்துவதற்கு துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரண்டு டக் படகுகளே பயன்படுத்தப்பட்டன. அவ்வாறான டக் படகுகளால் இதுபோன்ற தீயை கட்டுப்படுத்த முடியாது. அவை அதற்கு தகுதியுடையவை அல்ல. இதன்போது நாம் பயன்படுத்திய உபகரணங்கள் இதுபோன்ற தீயைக் கட்டுப்படுத்த தகுதியானவை அல்ல. நான் ஏற்கனவே கூறியது போன்று இது தொடர்பாக விசேட அறிவின்மை இரண்டாவது காரணியாகும்
நிபுணர்கள் சுட்டிக்காட்டும் வகையில், நாட்டின் மேற்குக் கரையோரம் சுற்றாடல் அழிவை எதிர்கொண்டுள்ளது. தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, காக்கைத்தீவு, பமுனுகம, சரக்குவ மற்றும் நீர்கொழும்பு கடற்கரையோரங்களைத் தவிர ஹிக்கடுவ கடற்கரையிலும் கப்பலில் இருந்ததாகக் கருதப்படும் பல பொருட்கள் இன்று கரையொதுங்கியுள்ளன. கடற்படை, கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளில் இன்றும் ஈடுபட்டனர். இது சுற்றாடல் பேரழிவின் ஆரம்பம் என சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.   ஏற்பட்டுள்ள சுற்றாடல் பேரழிவின் தாக்கத்தை மீனவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். உஸ்வெடகெய்யாவ - தல்தியவத்த, லுனாவ மீனவர்களால் சில நாட்களுக்கு முன்பு மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலில் வீசப்பட்டிருந்த வலைகள் இன்று காலை கரைக்கு கொண்டுவரப்பட்டன. அந்த வலைகளில் தீப்பற்றிய கப்பலில் இருந்த பொருட்கள் சிக்கியிருந்ததை மீனவர்கள் அவதானித்துள்ளனர். தீப்பிடித்த கப்பலில் இருந்த பொருட்கள் நீர்கொழும்பு முகத்துவாரம் ஊடாக நீர்கொழும்பு களப்புக்கு அடித்துச் செல்லப்படுவதைத் தடுப்பதற்காக நீர்கொழும்பு குச்சிதுவ பகுதியிலிருந்து தூவ மீனவர் கிராமம் வரையான பகுதிக்கு இடையில் முகத்துவாரத்தின் ஒரு பகுதியில் தடைகளை ஏற்படுத்த சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்று பிற்பகல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, தீப்பற்றிய X -PRESS PEARL கப்பலின் சிதைவுகள் மற்றும் கழிவுகள் கரையொதுங்கும் இடங்களை அடையாளங்கண்டு, அந்த பகுதிகளை அபாய வலயங்களாக அறிவிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கப்பல் தீப்பற்றியமையினால் ஏற்பட்ட அபாயகர கழிவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான வழிமுறைகள் மற்றும் யோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் கோவையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,
  • உரிய பாதுகாப்பு சாதனங்கள், உபகரணங்களை உரிய முறையில் பயன்படுத்தி குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும்.
  • கழிவுகளை தகுதிவாய்ந்த தற்காலிக களஞ்சியங்கள் அல்லது கொள்கலன்களின் வைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்
  • வெளி நபர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக உரிய பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்
  • மூடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதுடன், அதன் சாரதிகள் உள்ளிட்ட நபர்கள் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகும்
  • செலவிடப்படும் தொகை சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து அறவிடப்படல் வேண்டும்
  • மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் இந்த கழிவுப் பொருட்களை நிர்வகிக்கும் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படல் வேண்டும்.
  கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதிக்குள் பிரவேசித்து இன்றுடன் (29) ஒன்பது நாட்களாகின்றன. கப்பலில் பரவிய தீ இதுவரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை. இலங்கை விமானப்படையின் 212 பெல் ஹெலிகொப்டர் மூலம் மேல் இருந்து 425 கிலோகிராம் தீயணைப்பு இராசயனப் பொருட்கள் வீசப்பட்டன.     இந்நிலையில், இத்தகைய அபாயமிக்க கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்து அனுமதியின்றியா வந்தது எனும் கேள்வி எழுகின்றது. இந்த கேள்விக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பின்வருமாறு பதிலளித்தார்
இரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளதென இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்ட பின்னர் அதற்கான வசதிகள் தம்மிடம் இல்லை என கூறியுள்ளது. எனினும், அந்த எதனையும் எமது துறைமுகத்திற்கு அறிவிக்காமல் எமது துறைமுகத்திற்கு வெளியில் கப்பல் நங்கூரமிட்டிருந்தது. அதன் பிறகே தீப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்தது. நாம் ஆசியாவில் வர்த்தகத்தில் ஈடுபடும் துறைமுகமாவோம். எனவே, அவ்வாறான நிலைமை ஏற்பட்டவுடன் முதலாவதாக கப்பலின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் நடவடிக்கை எடுத்தோம். மூன்று நாட்களாகின. துரதிர்ஷ்டவசமாக வானிலை மாற்றத்தின் காரணமாக கடல் சீற்றத்துடன் இருந்ததன் காரணமாகவே தீ மேலும் பரவியது. துறைமுகத்திற்கு வரும் போது இந்தக் கப்பல் மாத்திரமல்ல வேறெந்த கப்பலாக இருந்தாலும் துறைமுகத்திற்கு பொறுப்பானவரும்  துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும் அந்தக் கப்பல் அனுமதிக்கக்கூடிய வகையில் உள்ளதா என்பதை அவதானித்தே உள்ளே வருவதற்கு அனுமதிப்பார்கள். எனினும், துறைமுகத்திற்கு வெளியில் இருந்த போதே கப்பலில் தீப்பற்றியுள்ளதென தெரிவித்தார்கள். இந்தியாவிலிருந்து வெளியேறும் போதேனும் எமது துறைமுக அதிகார சபைக்கு அறிவிக்கப்படவில்லை
அவரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூரின் MTI Network நிறுவனத்தின் பணிப்பாளர் அன்டிர லீஹீயிடம் வினவியதற்கு, அவரது பதில் பின்வருமாறு அமைந்தது,
நாம் இலங்கை கடற்படையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் போது மீட்புக் குழுக்களினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இடம்பெறும் வரை நிகழ்ந்தவை தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்க்கவில்லை. தற்போதைக்கு நாம் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்தே கவனம் செலுத்துகின்றோம். அதன் பிறகு நாம் விசாரணை நடத்துவோம். அந்த விசாரணைகளின் போது தேவையான தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாக தகவல்கள் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்
இதேவேளை, கப்பல் இரண்டாக பிளவுபடும் அளவிற்கு பாதிக்கப்படவில்லை என சிங்கப்பூரின் MTI Network நிறுவனத்தின் பணிப்பாளர் இன்று பிற்பகலில் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.