பொருளாதார மையங்களுக்கு மரக்கறி கொண்டுசெல்ல அனுமதி

இன்றிரவு முதல் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகளை கொண்டுசெல்ல அனுமதி

by Staff Writer 29-05-2021 | 11:48 AM
Colombo (News 1st) பொருளாதார மத்திய நிலையங்களுக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை இன்றிரவு (29) முதல் கொண்டுசெல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நாளையும் (30) நாளை மறுதினமும் (31) பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளதால், இன்றிரவு பொருட்களை கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்படுவதாக அவர் கூறினார். பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களுக்கு பயணிக்கும் வாகனங்களுக்கு உரிய வகையில் அனுமதியை வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைக்காக வீடுகளில் இருந்து செல்வோர் தொழிலுக்கான அடையாள அட்டையுடன், அலுவலக தலைமை அதிகாரியின் கடிதத்தையும் வைத்திருத்தல் வேண்டும் என அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சிலர், அதனை தவறாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அலுவலக தலைமை அதிகாரியால் வழங்கப்படும் கடிதத்தை ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியில் காண்பிக்க முடியுமாயின், அது போதுமானதாக கருதப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.