அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடமாடும் சேவைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 28-05-2021 | 7:25 PM
Colombo (News 1st) ஜூன் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற COVID ஒழிப்பு விசேட செயலணிக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடமாடும் சேவைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இன்றைய கூட்டத்தின் போது ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வௌியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. வீதிகளில் பயணிக்கும் போது, தொழில் அடையாள அட்டையுடன் அலுவலக தலைமை அதிகாரியின் கடிதத்தையும் வைத்திருப்பது அத்தியாவசியம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் Sinopharm இரண்டாவது தடுப்பூசியை, முதல் தடுப்பூசி ஏற்றப்பட்ட இடத்திற்கு சென்று மக்கள் பெற்றுக்கொள்வற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.