by Bella Dalima 27-05-2021 | 10:22 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் கப்பல் முழுமையாக தீக்கிரையாகியுள்ளமையை காண முடிகிறது.
இலங்கை கடற்படையின் கஜபாகு கப்பலுடன் இந்திய கரையோர பாதுகாப்பு படையணியின் வஜ்ரா மற்றும் விபவ் போன்ற கப்பல்கள் X-Press Pearl கப்பலுக்கு அருகில் சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
இலங்கை கடற்படையின் ஹெலிகொப்டர்களும் இதற்காக பயன்படுத்தப்பட்டதுடன், இந்திய கரையோர பாதுகாப்பு படையின் ரோனியர் படகுகளும் இதற்காக ஈடுபடுத்தப்பட்டன.
இந்நிலையில், கப்பலின் சிதைவுகளும் அதில் கொண்டுவரப்பட்ட கொள்கலன்களிலிருந்த பொருட்களும் கரையொதுங்கி வருகின்றன.
தெஹிவளை, வௌ்ளவத்தை, பம்பலப்பிட்டிய , பமுனுகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் கப்பலின் பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.
கரையோதுங்கிய பொருட்களை அகற்றும் நடவடிக்கையில் கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை, கடற்படை , மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கரையோர பாதுகாப்பு அதிகார சபை என்பன ஈடுபட்டுள்ளன.