பலத்த காற்றுடனான மழை பெய்யக்கூடும்

பலத்த காற்றுடனான மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 27-05-2021 | 1:51 PM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டை ஊடறுத்து மணிக்கு 30 தொடக்கம் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதி , வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் ஒரு இலட்சத்து1,77,000-இற்கும் அதிகமான இணைப்புகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தறை, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். எவ்வாறாயினும், துண்டிக்கப்பட்டுள்ள மின்சார இணைப்புகளை வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார். நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த காற்று வீசுகிறது.