மழையுடனான பலத்த காற்றினால் வீடுகள் பல சேதம்; மரக்கறி, பழ செய்கைகளும் பாதிப்பு

by Staff Writer 26-05-2021 | 6:40 PM
Colombo (News 1st) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனிடையே, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 4 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹரூப் நகரில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. வீட்டின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் சுவரில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆலங்கேணி - கோவிலடி சந்தியில் ஆலமரம் முறிந்து வீழ்ந்ததில், ஈச்சந்தீவு ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலுக்கு சென்ற, திருகோணமலை - திருக்கடலூர் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் வீடு திரும்பவில்லை. 21 வயதுடைய இருவரும், 34 வயதான ஒருவருமே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். இந்நிலையில், மூதூர் - கட்டைபறிச்சான் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பெருமளவு பப்பாசி செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ இயந்திரமொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. நேற்று வீசிய பலத்த காற்றினால் புலோப்பளை பிரதான வீதியில் உள்ள மின் கம்பம் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பல மணித்தியாலங்களுக்கு ஐந்து கிராமங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வீட்டின் மீது பனை மரம் வீழ்ந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த வீட்டிற்கு முன்னால் உள்ள வெற்றுக் காணியிலிருந்த பனை மரமும் வீதியின் குறுக்காக வீழ்ந்துள்ளது. பனை மரங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி - பொன்னகர் பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. முகமாலை பகுதியில் காற்றினால் வீட்டின் கூரை அள்ளுண்டு சென்றதில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன், முழங்காவில் விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவு சங்க கூரைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் நேற்று வீசிய பலத்த காற்றினால், 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மன்னார் மாவட்டத்தில் 13 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு சிறு கடைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. மாந்தை மேற்கு - பெரியமடு கிராமத்தில் 3 ஏக்கர் பப்பாசி செய்கையும், தேவன்பிட்டி - வெள்ளாங்குளம் பகுதியில் 5 ஏக்கர் வாழை செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளதுடன், படகுகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் - தாழ்வுபாடு பகுதியில் வீடொன்றின் கூரை மீது பனை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தின் தெனியாய - பெவர்லி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டது. நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், இணைய வழியில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டி - கொழும்பு பிரதான வீதி பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் புசல்லாவை - டெல்டா கெமுனுபுர கல்பாலத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வீதியில் கற்பாறைகள் வீழ்ந்துள்ளதால் ஒழிவழிப் போக்குவரத்து மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது. கம்பளையிலிருந்து உலப்பனையூடாக கொத்மலை - பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியின் நுகவெல கடதொர பகுதியில் பாரிய மரமொன்று வீழ்ந்துள்ளது. இதனால், இந்த வீதியூடாக போக்குவரத்து நேற்றிரவு முதல் பாதிக்கப்பட்டதுடன், பிரதேச மக்கள் இணைந்து இன்று காலை மரத்தை அங்கிருந்து அகற்றினர். நாவலப்பிட்டி தொலஸ்பாகை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளது. கேகாலை - அட்டாலை பின்தெனிய தோட்டத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், ஒருவர் காயமடைந்ததுடன் வீட்டிற்கும் சேதமேற்பட்டுள்ளது. மாத்தளையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பெரிய செல்வகந்தை தோட்டப்பகுதியில் மரக்கறி செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்றினால் அளவெட்டி, தெல்லிப்பளை பிரதேசங்களிலும் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. வவுனியா - ஒலுமடுப் பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றினால் நூற்றுக்கணக்கான பப்பாசி மரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. 600-இற்கும் மேற்பட்ட பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். யாழ். மயிலிட்டி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்லும் வௌி மாவட்ட மீன்வர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். சீரற்ற வானிலையால் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலையில், வீடுகளுக்கும் செல்ல முடியாமல் மீனவர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்ப்பாணம் - அராலியில் மீனவர்களின் மீன் விற்னை கொட்டகை இரவு வீசிய காற்றினால் சேதமடைந்துள்ளது. முல்லைத்தீவு - விசுவமடு பிரதேசத்தில் கடும் மழையுடனான பலத்த காற்றினால் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. சுமார் 600 வாழை மரங்கள் வரை சரிந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கொத்மலை - காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு பிரவேசிக்கும் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. இன்று காலை கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.