புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் நியமனம்

by Staff Writer 26-05-2021 | 7:35 PM
Colombo (News 1st) புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று மாலை நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. புதிய சட்டமா அதிபராக பதவியேற்றுள்ள சஞ்சய் ராஜரட்ணம், திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட முடிக்குரிய வழக்கறிஞரான D.ராஜரட்ணத்தின் பேரனும் சிரேஷ்ட சட்டத்தரணி சிவா ராஜரட்ணத்தின் புதல்வருமாவார். கொழும்பு சென். பீற்றர்ஸ் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைப் பயின்ற சஞ்சய் ராஜரட்ணம், இலங்கை சட்டக்கல்லூரியில் தனது சட்டக்கல்வியை பூர்த்தி செய்து 1987 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்ததுடன், இலண்டன் குயின்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டத்தை சிறப்புத் தேர்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். புதிய சட்டமா அதிபரான சஞ்சய் ராஜரட்ணம் கடந்த 34 வருடங்களாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரச தரப்பு சட்டவாதியாக சட்டமாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் சிரேஷ்ட அரச சட்டவாதி, பிரதி சொசிற்றர் ஜெனரல், மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் எனும் பதவிகளை வகித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட சஞ்சய் ராஜரட்ணம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளதுடன், 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் நியமனம் பெற்றார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற காலத்தில் மத்திய வங்கி, மொரட்டுவை பல்கலைக்கழகம், தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில்சார் கல்வி அமைச்சு, பகிரங்க தொழில்முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக இவர் திகழ்ந்துள்ளார். சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்வி பேரவையின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் பெருநிறுவனப் பிரிவு, பொதுமக்கள் பிராது பிரிவு, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான கோர்ப்புக் கண்காணிப்பு பிரிவுகளில் கடமையாற்றிய இவர், திணைக்களத்தின் சிவில் பிரிவிற்கு பொறுப்பாகவும் கடமையாற்றி துரித கதியில் வழக்குகளை தாக்கல் செய்வதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் பல்வேறு முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகளில் அரசை பிரதிநிதித்துவம் செய்துள்ள சஞ்சய் ராஜரட்ணம், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் பல முக்கிய எழுத்தாணை வழக்குகளை முன்னெடுத்துள்ளார். மும்மொழி புலமையும் சட்ட வல்லமையுமுள்ள புதிய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் பல நாடுகளில் நடைபெற்ற சட்ட மாநாடுகள் மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.