பிரிட்டனின் மிகப்பெரிய இறக்குமதி சந்தையானது சீனா

பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதி சந்தையானது சீனா

by Staff Writer 26-05-2021 | 2:55 PM
Colombo (News 1st) ஜெர்மனியை பின்தள்ளி பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதி சந்தையாக சீனா இடம்பிடித்துள்ளது. தரவுகள் பதிவு செய்யப்பட ஆரம்பித்த காலத்தின் பின்னர் முதற்தடவையாக சீனா தனியொரு இறக்குமதி சந்தையாக இந்த இடத்தைப் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, இந்த ஆண்டின் முதல் காலாண்டு வரை சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி 66 வீதமாக உயர்வடைந்து 16.9 பில்லியன் பவுண்ட்ஸாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இதே காலப்பகுதியில் ஜெர்மனியிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி கால் பங்கால் வீழ்ச்சியடைந்து 12.5 பில்லியன் பவுண்ட்ஸாக குறைவடைந்துள்ளது. Brexit-இனால் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையிலான வர்த்தகத்தில் தடை ஏற்பட்டதனாலும், கொரோனா பெருந்தொற்றினாலும் சீன பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் பொருட்கள் வர்த்தகத்தில், Brexit மற்றும் கொரோனா தொற்றின் பாதிப்புகளை கண்டறியும் நோக்கில் பிரித்தானிய தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தினால் இந்தத் தரவுகள் பெறப்பட்டிருந்தன.