கடலில் நச்சுப் பதார்த்தங்கள் கலந்துள்ளனவா என ஆய்வு

கடல்வாழ் உயிரினங்கள், கடலுணவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ளதா என நாரா ஆய்வு

by Staff Writer 26-05-2021 | 5:03 PM
Colombo (News 1st) கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுணவுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் கொழும்பு துறைமுகத்தினை அண்டிய கடலில் கலந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகளை நாரா நிறுவனம் ஆரம்பித்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இரசாயனக் கொள்கலன்களை ஏற்றி வந்த கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ பரவல் காரணமாக கொள்கலன்களில் இருந்த இரசாயன பதார்த்தங்கள், கப்பலில் இருந்த எரிபாருள் மற்றும் எண்ணெய் போன்றன கடலில் கலந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆய்வு நிறுவனம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு நிறுவனம் ஆகியன இணைந்து குறித்த பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பதார்த்தங்கள் மற்றும் திரவங்களின் மாதிரிகள் சேகரித்து வரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா கூறினார். கொழும்பு துறைமுகம் அருகில் தீ விபத்துக்குள்ளான X-PRESS PEARL கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள் மற்றும் சிதைவுகள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. கரையொதுங்கியுள்ள கொள்கலன்களில் அபாயகரமாக பொருட்கள் காணப்படக்கூடும் என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்