தீ பற்றிய X-Press Pearl கப்பலின் சிதைவுகளை கண்டுபிடிக்க ட்ரோன் கெமராக்கள் அனுப்பி வைப்பு

தீ பற்றிய X-Press Pearl கப்பலின் சிதைவுகளை கண்டுபிடிக்க ட்ரோன் கெமராக்கள் அனுப்பி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

26 May, 2021 | 8:28 pm

Colombo (News 1st) தீ பற்றிய கப்பலில் இருந்து மிதந்து கரையொதுங்கும் பொருட்களை சேகரிப்பதற்காக செல்வோரை தடுக்கும் நடவடிக்கையில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

திக்கோவிட்டவில் இருந்து சிலாபம் வரையான கரையோரப் பகுதிகளை கடற்படையினர் கண்காணித்து வருகின்றனர்.

வௌ்ளவத்தை மற்றும் பாணந்துறை கரையோரப் பகுதிகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

தீ பரவியுள்ள கப்பலில் இருந்து கரையொதுங்கும் பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கரையொதுங்கும் பொருட்களில் எவ்வாறான இரசாயனங்கள் அடங்கியுள்ளன என்பது குறித்து உரிய முறையில் தெரியாமையால் அவற்றை தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த MV X-Press Pearl கப்பலில் கடந்த வியாழக்கிழமை தீ பரவியது.

எத்தனோல், 25 தொன் நைட்ரிக் அசிட், இரசாயனப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 1486 கொள்கலன்கள் கப்பலில் இருந்தன.

சீரற்ற வானிலை காரணமாக கடற்படையினர் மற்றும் துறைமுக அதிகார சபையினரால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்காக இந்தியாவின் வஜ்ரா மற்றும் விபவி மாத்திரமல்லாது இலங்கை கடற்படையின் சயுரல கப்பலும் தயாராகவுள்ளது.

இன்றும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெல் 112 ஹெலிகொப்டர்கள் மூலம் 850 கிலோகிராம் இரசாயன பொருட்கள் வீசப்பட்டன.

அத்தோடு, ட்ரோன் கெமராக்கள் மூலம் சிதைவுகள் கண்காணிக்கப்படுகின்றன.

கப்பலில் இருந்த பணியாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று பகல் அறிவிக்கப்பட்டாலும் இரண்டாவது PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

கப்பலில் தொடர்ந்தும் தீ பரவி வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்