MV X-Press Pearl கப்பலில் பரவிய தீயை அணைக்க இந்தியா ஒத்துழைப்பு

by Staff Writer 25-05-2021 | 8:21 PM
Colombo (News 1st) MV X-Press Pearl கப்பலில் பரவிய தீ தற்போது கப்பலின் கட்டுப்பாட்டு அறை வரை பரவியுள்ளது. கப்பலில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று இரவு இந்தியாவின் உதவி கிடைக்கும் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகெதென்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹசீரா துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த MV X-Press Pearl கப்பலில் கடந்த வியாழக்கிழமை (20) தீ பரவியது. சிங்கப்பூர் கொடியுடன் உள்ள இந்தக் கப்பலில் தீ பரவிய சந்தர்ப்பத்தில் எத்தனால், 25 தொன் நைட்ரிக் அசிட் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்கள்1486 கொள்கலன்களில் இருந்துள்ளன. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்ட நிலையில் கப்பலில் தீப்பற்றியுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் துறைமுக அதிகாரிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த போதிலும் காலநிலை மற்றும் இரசாயன திரவங்கள் காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இன்று காலை கப்பலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இரண்டு இந்தியப் பிரஜைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கப்பலில் 25 பேர் கடமையாற்றியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கப்பலில் வெடிப்பு ஏற்பட்டபோது 8-இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த கொள்கலன்களில் ஆபத்தான இரசாயனங்கள் காணப்படுவதாக கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதுபுர தெரிவித்தார். இதனால் கரையொதுங்கும் எந்த பொருட்களையும் தொட வேண்டாம் என அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.