கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

MV X-Press Pearl கப்பலில் தீ பரவல்: கரையொதுங்கும் பொருட்களை தொட வேண்டாம் என அறிவுறுத்தல்

by Staff Writer 25-05-2021 | 2:32 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் நங்கூரமிடப்பட்ட நிலையில் தீப்பற்றியுள்ள MV X-Press Pearl கப்பலிலுள்ள கொள்கலன்களில் சில கடலில் வீழ்ந்துள்ளன. குறித்த கொள்கலன்களில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதால், கரையொதுங்கும் பொருட்கள் எதனையும் தொட வேண்டாம் என மீனவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, MV X-Press Pearl கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே, சமுத்திர சூழலை பாதுகாப்பதற்காக தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலை 50 கடல் மைல் தொலைவிற்கு ஆழ்கடலுக்கு நகர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிடப்பட்டுள்ள X-Press Pearl கப்பலிலுள்ள கொள்கலனொன்று வெடித்துள்ளது. இதில் காயமடைந்த இரண்டு இந்திய பிரஜைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதம தாதி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி டி சொய்சா தெரிவித்தார். கப்பலிலிருந்த கொள்கலன்களில் 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. X-Press Pearl கப்பல் எத்தனால், 25 தொன் நைட்ரிக் அசிட் மற்றும் பல அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுடன் பயணித்துள்ளது.