6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்குமா? 

பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்குமா? 

by Staff Writer 25-05-2021 | 8:03 PM
Colombo (News 1st) ஜூன் மாதமளவில் உலக நாடுகளில் 10 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவில் ஏற்பட்ட நிலைமையினால் இரண்டாம் தடுப்பூசியாக நாட்டிற்கு கிடைக்க வேண்டிய 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எவ்வளவு தொகையை செலுத்தியேனும் 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக இன்று பத்திரிகைகள் செய்தி வௌியிட்டிருந்தன. இதேவேளை, நாட்டில் 60 அல்லது 70 வீதமானவர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் கட்டாயமாக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இணை அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார். விரைவில் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். உலக நாடுகள் பல தமக்கு தேவையானவற்றை விட அதிகமான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் உரிய நேரத்தில் அதனை செய்யாமல், ஆயுர்வேத பாணியின் பின்னால் சென்றதாக மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தடுப்பூசி ஆலோசனை நிபுணர் குழு உறுப்பினர் விசேட வைத்திய நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார்.