சீரற்ற வானிலையால் இயல்வு வாழ்க்கை பாதிப்பு; திருகோணமலையில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை

by Staff Writer 25-05-2021 | 7:37 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலை - திருக்கடவூரில் கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளனர். நேற்று முன்தினம் (23) இவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். கரைக்குத் திரும்பாத இந்த மீனவர்களைத் ​தேடும் பணிகளில் 10 படகுகள் ஈடுபட்டுள்ளன. திருகோணமலையில் இன்று வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தோப்பூர் பகுதியில் வீடு ஒன்றின் கூரையும் மற்றுமொரு வீட்டின் தகட்டு வேலியும் காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன. மன்னார் - தாழ்வுபாடு பகுதியில் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதால், அங்குள்ள படகுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வலைகள் நீரில் காணாமற்போயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, கண்டி - ஹட்டன் பிரதான வீதியின் பல்லேகம சந்தியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 4 மணி ​நேரம் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கண்டி - நாவலப்பிட்டி பிரதான வீதியில் மல்லாந்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதனிடையே, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால், 03 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஹட்டன் - வெலிஓய தோட்ட பகுதியில் இன்று அதிகாலை கற்பாறை சரிந்து வீழந்துள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், பொகவந்தலாவை லோயினோன் பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகளுக்கு தேசம் ஏற்பட்டுள்ளது. டயகம மற்றும் அக்கரபத்தனையில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலையால் தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக மரக்கறி செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மாத்தளை - கந்தேநுவர பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மின் கம்பம் சேதமடைந்தமையால், குறித்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறித்த பகுதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. புசல்லாவை இரட்டை பாதையில் இருந்து நயாபன பகுதிக்கு செல்லும் வீதியின் நியூ பீகொக் பகுதியில் காற்றுடன் கூடிய மழையினால் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், பீகொக் பகுதிக்கான மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதேவேளை, நீர்கொழும்பு கட்டுபிட்டிய, ஜெபா எல பகுதியில் சுமார் 6 அடி நீளமான முதலையை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களிடம் முதலையை பிரதேச மக்கள் ஒப்படைத்துள்ளனர்.