நாவலப்பிட்டியவில் அதிகூடிய மழைவீழ்ச்சி; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாவலப்பிட்டியவில் அதிகூடிய மழைவீழ்ச்சி; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாவலப்பிட்டியவில் அதிகூடிய மழைவீழ்ச்சி; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

25 May, 2021 | 2:12 pm

Colombo (News 1st) 24 மணித்தியாலங்களில் அதிகூடிய அளவில் 188.05 மில்லிமீட்டர் மழைவீ​ழ்ச்சி நாவலப்பிட்டி பகுதியில் பதிவாகியுள்ளது.

நுவரெலியா – எல்டன் ஸ்டேஸ் தோட்டத்தில் 188 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஹட்டன் – நோர்டன் பகுதியில் 170 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நுவரெலியா – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, களுகங்கை பெருக்கெடுத்துள்ளமையால் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி, நிவித்திகல, பெல்மடுல்ல, கஹவத்த, எலபாத்த பிரதேசங்களின் களுகங்கையின் தாழ்நிலப்பகுதிகளில் வௌ்ளம் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சீ.சுகீஷ்வர தெரிவித்தார்.

இதேவேளை, குக்குலேகங்க நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

விநாடிக்கு 60 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சீ.சுகீஷ்வர குறிப்பிட்டார்.

இதனால் மதுகம, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மில்லனிய, பதுரளிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பலத்த மழை காரணமாக புலத்சிங்கள – மோல்காவ வீதி நீரில் மூழ்கியுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

காலி, களுத்தறை, கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா, கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்தில் உடபலாத்த, யட்டிநுவர, கங்கவட்டகோரளை, பஸ்பாகிரகோரளை, உடுநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கிரிஎல்ல, அயகம, இரத்தினபுரி, எலபாத, பெல்மடுல்ல, நிவித்திகல, கலவான, இம்புல்பே, பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட, யட்டியந்தோட்டை, தெரணியகல, வரக்காபொல, அரநாயக்க, ருவன்வெல்ல, கலிகமுவ மற்றும் புலத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்த, வலல்லாவிட்ட, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்