பூசணி அறுவடை அமோகம்; சந்தைப்படுத்துவதில் சிக்கல்

by Staff Writer 24-05-2021 | 7:24 PM
Colombo (News 1st) சிறந்த காலநிலையினால் தமது விவசாய உற்பத்திகளை அனுகூலமாகப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் அவற்றை சந்தைப்படுத்த முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட பூசணி உற்பத்தியை விற்பனை செய்ய முடியாத நிலையை தாம் எதிர்நோக்கியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சுழிபுரம் பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர். பொருத்தமான காலநிலை நிலவியதால், அதிகமான விளைச்சலை தாம் இம்முறை பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனினும், பயணத் தடை மற்றும் சந்தைகள் இயங்காமையாலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அடிக்கடி மூடப்பட்டதனாலும் அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் விசனம் வௌியிட்டனர். கேள்வி நிலவுகின்ற போதிலும் சந்தைப்படுத்த முடியாமையால் சுமார் 10 ரூபாவிற்கே ஒரு கிலோ பூசணியை விற்பனை செய்வதாகவும் அந்த விலைக்கும் தற்போது பூசணியை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர். முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் பூசணி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாரான மற்றும் அறுவடை செய்துள்ள பூசணியை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மரக்கறி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான், தண்டுவான், ஒலுமடு, மாங்குளம் போன்ற பகுதிகளில் வீடுகளில் உற்பத்தி பெருமளவில் தேக்கி வைக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 30,000 தொடக்கம் 45,000 கிலோகிராம் வரையில் விவசாய உற்பத்திகளை விற்க முடியாமல் விவசாயிகள் உள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு - வந்தாறுமூலை மற்றும் விவசாய பிரிவிற்குட்பட்ட வேரம் மற்றும் வெள்ளையண்டசேனை தர்ப்பூசணி செய்கையாளர்களும் பயணத் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தர்ப்பூசணியின் அறுவடைக்குரிய காலம் கடந்தும் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். பெருமளவு விலை கொடுத்து மூலப்பொருட்கள் , பசளை , கிருமிநாசினியைப் பெற்றுக்கொண்ட போதிலும் உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.