ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் காலமானார்

சிவாகம முத்தாமணி சிவஶ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் காலமானார்

by Staff Writer 24-05-2021 | 7:02 PM
Colombo (News 1st) இலங்கையின் மூத்த சிவாச்சாரியார்களில் ஒருவரான சிவாகம முத்தாமணி சிவஶ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் தனது 85 ஆவது வயதில் இன்று இறையடிசேர்ந்தார். நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் குரு முதல்வராகவும் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆதீனத்தின் பிரதம குருவாகவும் இறைபணியாற்றிய சிவஶ்ரீ ஜம்புகேஸ்வர மகேஸ்வர சிவாச்சாரியார் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் குருபீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். பல நூற்றுக்கணக்கான கும்பாபிஷேகங்களையும் சங்காபிஷேகங்களையும் மகோற்சவக் கிரியைகளையும் முதன்மை குருவாக இருந்து பல தேசங்களிலும் ஆகம முறைப்படி நடத்தி சைவத் தமிழ் உலகிலும் அந்தண சமூகத்திலும் நிகரற்ற மதிப்பை சிவாச்சாரியார் பெற்றிருந்தார். பன்மொழிப் புலமை மிக்கவரான மகேஸ்வர சிவாச்சாரியார், யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஶ்ரீ சக்கர யந்திர பூஜை பற்றிய நூலை எழுதியுள்ள சிவாச்சாரியார், ஆனைப்பந்தியில் அந்தணர்களுக்கான குருகுல உருவாக்கத்திலும் முனைப்புக்காட்டியதுடன், குருகுலத்தில் அந்தண மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் ஆகம வகுப்புகளுக்குச் சிறந்ததோர் வழிகாட்டியாக இருந்து பணியாற்றினார். சிவாச்சாரியாரின் மறைவு அந்தண சமூகத்திற்கும் இந்துக்களுக்கும் பேரிழப்பென புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸவின் இந்து மத அலுவல்களுக்கான இணைப்பாளர் சிவஶ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிவஶ்ரீ ஜம்பு மகேஸ்வர சிவாச்சாரியாரின் இழப்பு சைவத் தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் சிவாச்சாரியாரின் சிவபிராப்திக்கு பிரார்த்தனை செய்யுமாறும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமா மகேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.