புதிய வழிகாட்டல்களுக்கு அமைய PCR, Antigen பரிசோதனைகளை மேற்கொள்ளத் தவறினால் அனுமதி இரத்து

புதிய வழிகாட்டல்களுக்கு அமைய PCR, Antigen பரிசோதனைகளை மேற்கொள்ளத் தவறினால் அனுமதி இரத்து

எழுத்தாளர் Staff Writer

24 May, 2021 | 8:04 pm

Colombo (News 1st) வழங்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய PCR மற்றும் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ளத் தவறும் தனியார் ஆய்வுக்கூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி இரத்து செய்யப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்கள் அல்லது கடமைக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரில் மாத்திரமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதிரிகள் பெறப்பட்டதன் பின்னர் பெறுபேறு கிடைக்கும் வரை நிறுவனம் அல்லது வீடுகளுக்குள்ளேயே தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

அது தொடர்பாக குறித்த ஆய்வுக்கூடங்கள் அல்லது வைத்தியசாலைகளின் அதிகாரிகள் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை அங்கீகரிக்கப்பட்ட COVID -19 சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கவும் குறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.

இதனைத் தவிர, PCR மற்றும் Rapid Antigen பரிசோதனைகள் பாதுகாப்பான இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், WALK IN அல்லது DRIVE THROUGH முறைமைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்