தொடரும் சீரற்ற வானிலை; தயார் நிலையில் விமானப்படை

தொடரும் சீரற்ற வானிலை; தயார் நிலையில் விமானப்படை

by Staff Writer 23-05-2021 | 5:25 PM
Colombo (News 1st) சீரற்ற வானிலையின் போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க விமானப்படையை தயார் நிலையில் இருக்குமாறு விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கிணங்க, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 9 ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர், க்(G)ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளுக்காக விசேடமாக பயிற்சியளிக்கப்பட்ட விமானப்படை ரெஜிமன்ட்டின் விசேட படையணியினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, வௌ்ள நிலைமை ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக தென் மாகாணத்தின் ஹினிந்தும, எப்பல மற்றும் நாகொட பகுதிகளில் கடற்படையின் 04 நிவாரணக் குழுக்கள் நிலைகொண்டுள்ளன. உடனடியாக பாதிக்கப்படும் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக தெற்கு கடற்படை கட்டளையின் மேலும் 08 வௌ்ள நிவாரணக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சீரற்ற வானிலையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, வட மத்திய மற்றும் வட மேல் கடற்படை கட்டளையின் 49 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.