கப்பலிலிருந்து வௌியாகும் புகையால் சூழல் பாதிப்பு

X-Press Pearl கப்பலிலிருந்து வௌியாகும் புகையால் சூழலுக்கு பாதிப்பு: கடல் மாசு தடுப்பு அதிகார சபை

by Staff Writer 22-05-2021 | 2:57 PM
Colombo (News 1st) தீ பரவியுள்ள X-Press Pearl கப்பலின் கொள்கலன்களிலிருந்த இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்துள்ளதா என்பது குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக கடல் மாசு தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார். அத்துடன், கப்பலிலிருந்து வௌியாகும் புகை காரணமாக நாட்டின் சூழல் கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கப்பலின் கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இரசாயனங்கள் மேலும் தீப்பிடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, துறைமுக அதிகார சபைக்குட்பட்ட 3 டக் படகுகள் ஊடாக கப்பலின் வெப்பத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து கப்பலின் காப்புறுதி நிறுவனம் மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. X-Press Pearl சரக்குக் கப்பல் 9.5 கடல்மைல் தொலைவில் கொழும்பு துறைமுகத்தின் வட மேற்கு பகுதியில் நங்கூரமிட்டுள்ளது.