இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கம் இடையிலான போர் நிறுத்தம்

இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கம் இடையிலான போர் நிறுத்தம்

by Bella Dalima 22-05-2021 | 4:16 PM
Colombo (News 1st) இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போரை நிறுத்த இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பினரும் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனா். சண்டை முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. முன்னதாக, மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து உட்பட சா்வதேச நாடுகள் முயற்சி மேற்கொண்டன. நிபந்தனையற்ற மற்றும் இருதரப்பு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு ஒப்புதல் அளித்தது. மேலும், கள நிலவரத்தைப் பொருத்தே தாக்குதல் முடிவுக்கு வருமா அல்லது தொடருமா என்று முடிவு செய்யப்படும் என்றும் இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ஆனால், இந்த போர் நிறுத்தத்தை ஹமாஸ் படையினா் ஏற்றுக்கொண்டனா். இதையடுத்து, காஸா எல்லைப் பகுதியிலும், இஸ்ரேலின் தெற்குப் பகுதியிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பட்டாசுகளை வெடித்தும், பாடல்களைப் பாடியும் இரு நாட்டு சாலைகளிலும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.