முஸ்லிம் கட்சிகள் ராஜபக்ஸவின் கட்டுப்பாட்டில்

இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன: இம்ரான் மஹ்ரூப்

by Staff Writer 22-05-2021 | 6:13 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லையெனவும் அவை ராஜபக்ஸ அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். துறைமுக நகர சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இன்று காணப்படும் பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் அவை ராஜபக்ஸக்களின் கட்டுப்பாட்டில் உள்ளமை 20 ஆம் திருத்தம் மற்றும் துறைமுக நகர சட்டமூல வாக்கெடுப்பின் மூலம் தெளிவாவதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் திருத்த சட்டமூலத்தில் தலைவர் எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்ததுடன், அதன்பின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இனி அவர்கள் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டதாக இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், துறைமுக நகர சட்டமூலத்தின் மூலம் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் ராஜபக்ஸ கட்டுப்பாட்டிலேயே உள்ளார்கள் என்பது புலனாவதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். சட்டமூல விவாதத்தில் அதற்கு எதிராக பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இவர்கள் வாக்களிக்காமல் தடுத்துள்ளதாகவும் இவர்களால் ராஜபக்ஸக்களுக்கு எதிராக வாக்காளிக்க முடியாதென்பதே அதற்கான காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த பக்கம் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் கூட அக்கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். தமது தலைவரை சிறையில் அடைத்த அரசை எதிர்த்து வாக்களிக்க அவர்களால் முடியவில்லை எனவும் இம்ரான் மஹ்ரூப் கூறியுள்ளார்.