துறைமுக நகர் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் குளறுபடி: இருவேறு விசாரணைகளை நடத்த தீர்மானம்

துறைமுக நகர் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் குளறுபடி: இருவேறு விசாரணைகளை நடத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

22 May, 2021 | 3:12 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது உரிய வகையில் வாக்குகள் எண்ணப்படவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து இருவேறு விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை செய்யுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய வகையில் வாக்குகள் எண்ணப்படவில்லையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இதற்காக, தொழில்நுட்ப அமைச்சின் விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

வாக்குகள் எண்ணும் போது நிர்வாக ரீதியில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் ஆராய மற்றுமொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஓய்வு பெற்ற பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்த விசாரணைகளின் அறிக்கையை விரைவில் வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

எனினும், இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட விசேட பெரும்பான்மை வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று அறிக்கையூடாக தெரிவித்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்