எல் சல்வடோரில் முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்திலிருந்து 8 சடலங்கள் மீட்பு

எல் சல்வடோரில் முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்திலிருந்து 8 சடலங்கள் மீட்பு

எல் சல்வடோரில் முன்னாள் பொலிஸ் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்திலிருந்து 8 சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

22 May, 2021 | 4:00 pm

Colombo (News 1st) தென் அமெரிக்க நாடான எல் சல்வடோரில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது 8 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்னும் அங்கிருந்து மேலதிக சடலங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதைக்கப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பாலானவை பெண்கள் அல்லது சிறுமிகளுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாலியல் காரணங்களுக்காக பெண்கள் அல்லது சிறுமிகள் அதிகம் கொல்லப்படும் லத்தின் அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோரும் ஒன்று.

சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோ என்பவர் சாவேஸ் சான்ச்சுவாபா எனும் நகரத்தில் 57 வயதாகும் தாய் மற்றும் 26 வயது மகளை கொலை செய்ததற்காக இம்மாதம் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்பு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணைக்கு உள்ளாகியிருந்த அவர் தாயையும் மகளையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

தலைநகர் சான் சால்வடோரில் இருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தூரம் வடக்கே இருக்கும் ஹியூகோ எர்னஸ்டோவின் வீட்டை கடந்த வியாழன் அன்று தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.

அப்போது இறந்த உடல்கள் புதைக்கப்பட்டிருந்த, குறைந்தது ஏழு குழிகளை அவர்கள் கண்டுபிடித்தனர். அவற்றில் சில உடல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புதைக்கப்பட்டிருந்தன.

சுமார் பத்தாண்டு காலத்திற்கும் மேலாக தொடர் கொலைகள் நிகழ்ந்திருக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த ஆதாரங்கள் காட்டுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக குறைந்தபட்சம் 24 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை 8 என்று மாற்றப்பட்டுள்ளது. அதற்கான காரணமும் விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

 

 

Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்