இன்று இரவு முதல் 25ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு

இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு

by Staff Writer 21-05-2021 | 3:09 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. 25 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்படும் பயணக்கட்டுப்பாடு அன்றைய தினம் இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். நாட்டில் தற்போது COVID நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தினார். உடல்நிலை மிகவும் மோசமடைந்த பின்னரே அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் இதனால் அவர்களின் உயிரை பாதுகாப்பதில் சிக்கலை எதிர்கொள்வதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார். இந்நிலையில், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மருந்தகங்கள் திறந்திருக்கும் எனவும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர். பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சுற்றுலாக்கள், யாத்திரைகள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.