அண்டார்டிகா: உலகின் மிகப்பெரிய பனிப்பாறை பிரிந்தது

அண்டார்டிகாவிலிருந்து உலகின் மிகப்பெரிய பனிப்பாறை பிரிந்தது

by Bella Dalima 21-05-2021 | 5:29 PM
Colombo (News 1st) உலகின் மிகப்பெரிய பனிப்பாறை அண்டார்டிகா பனிப் பிரதேசத்திலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள தகவல் படி, ‘A-76’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பனிப்பாறை, இந்தியாவின் புது டெல்லியை விட 3 மடங்கு பெரியது என்று தெரிய வந்துள்ளது. டெல்லியின் பரப்பளவு 1,484 சதுர கிலோமீட்டா்களாக உள்ள நிலையில், இந்தப் பனிப்பாறை சுமாா் 4,320 சதுர கிலோமீட்டா் பரப்பளவு கொண்டதாகும். பனிப்பாறை தற்போது அண்டார்டிகா பனிப் பிரதேசத்திலிருந்து பிரிந்து அந்தப் பகுதியிலுள்ள வெடல் என்ற கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. அண்டாா்டிகாவிலிருந்து பனிப்பாறைகள் பிரிவது இது முதல் முறையல்ல. கடந்த பெப்ரவரியில் பாரிஸ் நகரை விட 1.5 மடங்கு பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவின் பிரன்ட் பனிப் பரப்பிலிருந்து பிரிந்தமை குறிப்பிடத்தக்கது. இதேபோல, 2017-ஆம் ஆண்டிலும் ஒரு பனிப்பாறை பிரிந்தது. எனினும், பனிப்பாறைகள் இவ்வாறு பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்குவது சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலக வெப்பமயமாதலும் பருவநிலை மாறுபாடுமே இவற்றுக்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனர்.