மலையகத்தில் COVID தொற்று அதிகரிப்பு

by Staff Writer 20-05-2021 | 4:16 PM
Colombo (News 1st) நேற்று (19) இரவு 9 மணிக்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தில் 233 COVID நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 88 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 83 பேருக்கும் தொற்று உறுதியானது. பதுளையில் 53 நோயாளர்களும் மொனராகலையில் 29 நோயாளர்களும் கண்டியில் 124 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை தினம் நாட்டில் பதிவான 36 COVID மரணங்களில் மலையகத்தை சேர்ந்த பலர் அடங்குகின்றனர். நாவலப்பிட்டி மற்றும் புசல்லாவ ஆகிய பகுதிகளில் தலா ஒரு மரணமும் மாத்தளை மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளில் தலா இரண்டு மரணங்களும் நேற்றைய தினம் பதிவாகியிருந்தன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது 27 பேர் COVID தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். பொகவந்தலாவையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நிவாரணங்கள் கிடைக்காமையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். லிந்துலை சென். கூம்ஸ் தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 574 குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்னனர். நுவரெலியா - டயகம ஆதார வைத்தியசாலையின் உதவி வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. நுவரெலியா வைத்தியசாலையில் இருந்த PCR இயந்திரம் செயலிழந்து காணப்பட்ட நிலையில், பரிசோதனைகளை உரியமுறையில் முன்னெடுக்க முடியாமற்போயிருந்தது. இந்நிலையில், நேற்று நுவரெலியா வைத்தியசாலைக்கு புதிய PCR இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.