இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 வீதம் குறைந்துள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது: உலக சுகாதார நிறுவனம்

by Bella Dalima 20-05-2021 | 3:33 PM
Colombo (News 1st) இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி வரையிலான கொரோனா பாதிப்பு நிலவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படுவது 12 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் 5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 23,87,663 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். அதைத் தொடா்ந்து, பிரேசிலில் புதிதாக 4,37,076 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது, 3 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் 21 சதவீதம் குறைந்துள்ளது. அர்ஜெண்டீனாவில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. கொலம்பியாவில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. உயிரிழப்பை பொருத்தவரை இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் புதிதாக 27,922 போ் உயிரிழந்துள்ளனா். அதாவது உயிரிழப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. நேபாளத்தில் 1,224 பேரும், இந்தோனேசியாவில் 1,125 பேரும் உயிரிழந்துள்ளனா். மே மாதம் 9 ஆம் திகதி நிலவரப்படி, இந்தியாவில் புதிதாக 27,38,957 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும். உலகளவில் கடந்த மூன்று வாரங்களாக புதிதாக தொற்று ஏற்படுவது குறைந்து வந்தாலும், சில பகுதிகளில் இன்னும் புதிதாக தொற்று ஏற்படுவது அதிகமாகவே உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.