by Staff Writer 19-05-2021 | 6:21 PM
Colombo (News 1st) சீனாவினால் தயாரிக்கப்படும் 05 இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு நன்கொடையாக கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சீன அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
05 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக கிடைக்கவுள்ள விடயத்தை சீன தூதரகம் உறுதி செய்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேலும் 30 இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவினர் உறுதி செய்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி டி சில்வா குறிப்பிட்டார்.
இன்று (19) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி டி சில்வா இதனை கூறினார்.
மாவட்ட கொரோனா தடுப்பு குழுவினருடனான சந்திப்பின் போது, அதிக பாதுகாப்பு வழங்க வேண்டிய பிரிவினராக கர்ப்பிணி தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, கர்ப்பிணி தாய்மாருக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பான திட்டமிடல்களுக்கு குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி டி சில்வா கூறினார்.